THIS IS A BILINGUAL BLOGSPOT; YOUR FEEDBACK IS MOST WELCOME

து ஒரு இருமொழி வலைப்பூ ; உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

Friday 14 November 2014

நினைவில் நிற்கும் ஒரு சந்திப்பு!

நினைவில் நிற்கும் ஒரு சந்திப்பு!
  


பல வருடங்களுக்கு முன்பு கண் பார்வையற்ற ஒரு டீச்சரை நான் சந்தித் தேன். இருபத்தியெட்டு வயது வரை பார்வையுடன் இருந்து, திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான பின் பார்வையை இழந்துவிட் டார் அவர். அரசாங்கம் அவருக்குப் பார்வை யற்றோர் பள்ளியில் ஆசிரியர் உத்தியோகம் அளித்தது. அங்கே பார்வையற்ற பெண் குழந்தைகள் படும் அவஸ்தையைப் பார்த்து அவர் பெண்களுக்குத் தனியாகப் பள்ளிக்கூடம் அமைக்கப் பாடுபட்டு அதில் வெற்றியும் பெற்றார். ஆனால் இந்த முயற்சி அவருக்கு சில எதிரிகளையும் ஏற்படுத்தியது. பள்ளியில் படிக்கும் ஒரு சிறிய பெண்ணை பலாத்காரம் செய்ததாய் அவர்மீது பொய்க்குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டு அவர் ‘ஸஸ்பெண்ட்’ செய்யப்பட்டார். ஆனால், பின்னர் விசாரணையில் அவர்மீது வீண்பழி சுமத்தப்பட்டது என்பது நிரூபிக்கப்பட்டது.




ஒரு கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்த, நடுவயதைத் தாண்டிய மனிதர் இத்தகைய குற்றச்சாட்டை, அதனால் ஏற்படும் அவமானத்தை எப்படி எதிர்கொண்டிருப்பார் என்று எனக்கு ஆச்சர்யம்;

அவரைக் கேட்டேன்.

 

அவர் சொன்னது: “அவமானம் என்று பார்க்க முடியாது. இன்று காலையில் அரசாங்க அலுவலகத்திற்கு ஒரு வேலையாகச் சென்றேன். அங்கிருக்கும் பெண் அலுவலர் எனக்கு பதில் சொல்லாமல் அரட்டை யடித்துக் கொண்டிருந்தார். நான் மறுபடியும் என் கேள்வியை முன்வைத் தேன். எரிச்சலடைந்த அந்தப் பெண், “இதெல்லாம் இந்த மாதிரிக் காரியம் பண்றதுக்கு முன்னால் யோசித்திருக்கவேண்டும்.” என்று சொன்னாள். இதற்கெல்லாம் வருத்தப்பட்டு என்ன ஆகப்போகிறது? அவள் காலையில் ஏதாவது வருமானத்தை எதிர்பார்த்து வந்திருக்கலாம். ஆனால், நான் அங்கே போகவும் அவளுக்கு ஏமாற்றமாக இருந்திருக்கும். வாழ்க்கை யில் எதுவும் நடக்கும். என்னை 28 வயது வரை முழுமையாகக் கவனித்துக்கொண்டவர் என் பெரியப்பா. ஆனால், எனக்குக் கண்பார்வை போனபின், ’சுப்ரமணியம், இனி என்னைப் பார்க்க நீ வர வேண்டாம்’ என்று சொல்லிவிட்டார்.அவர் சமீபத்தில் சொல்லியனுப்பினார் _ ‘உடம்பு சரியில்லை. குழந்தைகளும் ஃபாரினில் ‘செட்டில்’ ஆகிவிட்டார்கள். தனிமையாக இருக்கிறது. உன்னைப் பார்க்கவேண்டும்போல் இருக்கிறது’ என்று. எனக்குத் தான் ஒழியவில்லை.”

இங்கு நான் குறுக்கிட்டு, “என்ன, வரவேண்டாம் என்று சொன்னவரை எதற்காகப் போய்ப் பார்க்கவேண்டும் என்று நினைத்தீர்களா?” என்று கேட்டேன்.

அதற்கு அவர் கூறிய பதில்:

என் பெரியப்பா அப்படிச் சொன்னார் என்றால் அதற்கு என்ன செய்வது? அவர் ஒரு நல்ல உத்தியோகத்தில் இருந்தார். நாலு பெரிய மனிதர்கள் அவரைப் பார்க்க வருவார்கள். நான் அங்கே இருந்தால், ’இது யார்?’ என்று அவர்கள் கேட்டால் ‘தம்பியின் பையன்’ என்று சொல்லவேண்டிவரும். அவருக்குத் திருமண வயதில் பிள்ளைகள் இருக்கிறார்கள். இத்தகைய குறைபாடுடைய பரம்பரை என்று நினைத்துவிடுவார்களோ என்று கவலை இருந்திருக்கும்.

“அன்று ஹோட்டலில் போய் சாப்பிட்டோம் நானும் என் நண்பரும். முதலாளி பணம் வாங்க மறுத்துவிட்டார். நண்பருக்குக் கோபம் வந்து விட்டது. ’நம்மைப் பிச்சைக்காரர்கள் என்று நினைத்துவிட்டார் போலிருக் கிறது’, என்றார். நான் சொன்னேன்: “ஏதோ கொள்கை என்கிறார். நாம்கூட சிலசமயம் வைதிகர்களுக்குச் சாப்பாடு போடுவதில்லையா…”

ஆனால் உண்மையாகவே பிச்சைக்காரர்கள் என்று சிலர் நினைத்துவிடு வதும் உண்டு. அன்று ஒரு ‘கேஸ்’ விஷயமாக ஹைகோர்ட் வாசலில் நின்றுகொண்டிருந்தோம். யாரோ காசு போட்டுவிட்டுப் போய்விட்டார்கள். குடும்பத்திலேயே பலவிதமான சம்பவங்கள் நடக்கின்றன. இன்று காலை யில் நான் உங்களைப் பார்க்க வரவேண்டும் என்பது என் பிள்ளைக்குத் தெரியும். ஆனாலும் என்னை ‘பஸ்’ ஏற்றிவிட அவன் வரவில்லை. வேறு யாரோ எனக்கு உதவினார்கள். வேலை நடந்துவிட்டது. ஆனால், நாளைக்கு என் மகன் எனக்கு ஒன்றும் உதவ மாட்டான் என்று சொல்ல முடியாது!”




இதுவே ‘ULTIMATE PHILOSOPHY’ என்று எனக்குத் தோன்றியது.

“இப்பேர்ப்பட்ட MATURIITY உங்களுக்கு எப்படி வந்தது?” என்று கேட்டேன்.

“எல்லாம் NECESSITY தான்” என்றார் வெகு இயல்பாக.



0



No comments:

Post a Comment